குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பொய்களே வன்முறைகள் நடக்க காரணம்: அமித்ஷா குற்றச்சாட்டு

காந்திநகர்: குஜராத்தின் காந்தி நகரில் போலீசார் நலத்திட்டப் பணிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜ தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசியதாவது: எதிர்க்கட்சிகளுக்கு கையிலெடுத்து போராட வேறு பிரச்னைகள் இல்லாததால், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தவறான தகவல்களையும், பொய்களையும் கூறி மக்களை தவறான வழியில் நடத்துகின்றனர். இச்சட்டம் தொடர்பான அவர்களின் தவறான தகவல்கள், பொய் கூற்றுகள், நாடு முழுவதிலும் வன்முறை, அராஜகத்தை உருவாக்கி உள்ளது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இருந்து  துன்புறுத்தலுக்கு உள்ளாகி வெளியேறிய சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாறாக, யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. உண்மையை மக்களுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். பாஜ தொண்டர்கள் வீடு வீடாக சென்று இச்சட்டத்தின் நன்மைகள், பயன்கள் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். இதுகுறித்த நமது விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி ஆகியவை முடிந்த பின்னர், இச்சட்டத்தின் முக்கியவத்துவத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.

Related Stories: