ஈரோடு அதிமுகவில் உச்சகட்டத்தை எட்டிய கோஷ்டி மோதல் அமைச்சரின் ஆதரவாளரை தோற்கடித்த அதிமுக எம்எல்ஏ

ஈரோடு: பெருந்துறை ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவி சுயேச்சைக்கு பெற்றுத்தருவதற்காக அமைச்சர் கருப்பணன் முயற்சித்ததாகவும் அதை  அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தலைமையிலான கோஷ்டி முறியடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், திமுக கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், அதிமுகவை சேர்ந்த அதிருப்தி வேட்பாளர்கள் 4 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவுக்கு எதிராக, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரை, யூனியன் தலைவராக்க அமைச்சர் கருப்பணன் முயற்சித்ததாகவும், இதை பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தலைமையிலான நிர்வாகிகள் முறியடித்து, அதிமுகவை சேர்ந்த 7வது வார்டு உறுப்பினர் சாந்தி என்பவரை ஒன்றிய குழு தலைவராக தேர்வுசெய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் காரணமாக  தோப்பு வெங்கடாச்சலத்தின் அணியை சேர்ந்தவர்களை, அமைச்சர் கருப்பணன் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு, கட்சிக்கு எதிராக சுயேட்சையாக  போட்டியிட்டவரை யூனியன் தலைவராக கொண்டுவர ஆதரவு அளித்து வருவதற்கான ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளிக்க தோப்பு வெங்கடாச்சலம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

அமைச்சர் கருப்பணனை,  ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்காவிட்டால், அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு  புறநகர் மாவட்டத்தில் அதிமுக ஒரு எம்எல்ஏ சீட்கூட பெற முடியாத நிலை ஏற்படும் என தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்கள் போர்க்கொடி  தூக்கி உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தால்  ஈரோடு மாவட்ட அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

Related Stories: