நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் பலமாக உள்ளது..எந்த போருக்கும் தயாராக உள்ளோம்: ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே

புதுடெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு துறையும் பலமாக உள்ளது. எந்தவிதமான போருக்கும் ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் எதிர்கால போர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளித்து வருகிறோம். எந்த நேரத்தில், எந்த விதத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எண்ணிக்கை முக்கியமல்ல தரமே எங்களின் தாரக மந்திரம். பாதுகாப்பு பணியாளர்களுக்கான தலைவர் மற்றும் ராணுவ விவகாரங்களுக்கான துறை அமைப்பது பெரிய நடவடிக்கை. இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். ராணுவத்தை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பிற்கு நாங்கள் எப்போதும் விசுவாசமாக இருக்கிறோம்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை எங்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். தகுந்த படைகளுடன் அவர்களை எதிர்த்து போரிடுவோம். ராணுவ நடைமுறைகளின்படி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தக்க பதிலடி கொடுக்கப்படும். இதற்கு முன்பு இருந்ததை விட இந்திய ராணுவம் இப்போது பலமாகவும், சிறப்பாகவும் உள்ளது என்று கூறியுள்ளார். முன்னதாக, ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத், முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ராணுவ துணைத் தளபதியாக இருந்த மனோஜ் முகுந்த் நரவனே ராணுவ தளபதியாக நியமிக்‍கப்பட்டார். ஜெனரல் மனோஜ் முகுந்த், சீனாவுடனான இந்திய எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சி முடித்த அவர், கடந்த 1980ம் ஆண்டு சீக்கிய காலாட் படையில் இணைந்து தனது ராணுவப் பணியை தொடங்கினார். கடந்த 39 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் முகுந்த், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டவர். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவு மற்றும் காலாட் படையின் கமாண்டராகவும் இருந்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: