நிறுத்தம் இல்லாததால் 1 கி.மீ. அலையும் அவலம் புளியந்தோப்பு மின் வாரிய அலுவலக பகுதியில் மாநகர பஸ் நிறுத்தப்படுமா? பேரவையில் ரவிச்சந்திரன் எம்எல்ஏ கேள்வி

சென்னை: சட்ட பேரவையில் கேள்வி நேரத்தின்போது எழும்பூர் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் (திமுக) பேசியதாவது: யானைகவுனி பாலம் கடந்த 3 வருடங்களாக பழுதடைந்த காரணத்தால் 159ஏ, 159பி, 59, 37, 37ஜி ஆகிய மாநகர பேருந்துகள் பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு வழியாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பேருந்துகள் புளியந்தோப்பு மின்வாரிய அலுவலகம் அருகே நின்று சென்றால், அங்கிருந்து கோயம்பேடு செல்லக்கூடிய மக்கள், தொழிலாளர்கள் பெருமளவு பயன் பெறுவார்கள்.  ஆனால், அந்த பேருந்துகள் நேராக நடராஜா தியேட்டர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகள் ஏறக்குறைய 1 கிலோ மீட்டர் நடந்து சென்று, அந்த பேருந்துகளை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதேபோல், தி.நகரில் இருந்து (த.எண்.9) மாநகர பஸ் சேத்துப்பட்டு, எழும்பூர் மருத்துவமனை, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பாரிமுனை நோக்கி இயக்கப்படுகிறது. அந்த பேருந்து மெட்ரோ ரயில் பணி நடந்த காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.  இப்போது மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து விட்டதால், இந்த பஸ்சையும், தடம் எண்.17 என்ற பேருந்தையும் மேற்குறிப்பிட்ட பகுதியில் நின்று செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: உறுப்பினர் கூறிய 2 வழித்தடங்களிலும் பல வேலைகள் நடைபெற்றதால், மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இப்போது பணிகள் முடிந்து விட்டதால் அந்த பேருந்துகளை பழைய வழித்தடங்களில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: