பாஜ எதிர்ப்பு எதிரொலி? தீபிகா படுகோன் படத்துக்கு ம.பி., சட்டீஸ்கரில் வரி விலக்கு

புதுடெல்லி: பாஜ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீபிகா படுகோன் நடித்த சபாக் இந்தி படத்துக்கு மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்துள்ள இந்தி படம் சபாக். பெண் இயக்குனர் மேக்னா குல்ஸார் இயக்கியுள்ளார். டெல்லியில் லட்சுமி அகர்வால் என்பவரை ஒரு தலையாக காதலித்தார் வாலிபர் ஒருவர். அந்த காதலை ஏற்க மறுத்ததால் லட்சுமியின் முகத்தில் அந்த வாலிபர் ஆசிட் வீசினார். லட்சுமியின் கதைதான் சபாக் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடந்தது.

இதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக தீபிகா படுகோன் கலந்துக் கொண்டார். இதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து, தீபிகாவின் சபாக் படத்தை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் பரப்பினர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் சபாக் திரைப்படத்துக்கு முழு வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் மனதைரியத்தையும் போராட்டத்தையும் சித்தரிக்கும் இந்த படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த பட விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக பாஜவினர் புகார் கூறியுள்ளனர்.

Related Stories: