சிறுபான்மையினர்களை பாதுகாக்க தெரியாதவர்கள் மற்ற நாடுகளுக்கு அறிவுரை சொல்லக்கூடாது: மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தாக்கு

டெல்லி: தனது நாட்டில் சிறுபான்மையினர்களை பாதுகாக்க தெரியாதவர்கள் மற்ற நாடுகளுக்கு அறிவுரை சொல்லக்கூடாது என மத்திய வெளியுறவு  துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துகளை கடந்தாண்டு ஆகஸ்ட்  மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் அங்கு  பெரும் பதற்றம் ஏற்பட்டது. எதிர்கட்சி தலைவர்கள் பாஜகவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். இந்த பிரச்னை  உலகளவில் பேசப்பட்டது.  

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரவீஷ் குமார், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டிருப்பது நாட்டு நலன்  தொடர்பானது. ஆனால் இது குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மேலும் வெளிநாடுகளல் தவறுதலாக  பேசப்படுகிறது. காஷ்மீர் பகுதியின்  அமைதி மற்றும் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம், பதற்றமான சூழல் கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றார். காஷ்மீரை பார்வையிட 15  நாட்டு தூதரக அதிகாரிகள் கொண்ட குழுவை காஷ்மீர் செல்லுமாறு கேட்டுள்ளோம்.

அந்த குழுவில் அமெரிக்கா, தென்கொரியா, வியட்னாம், வங்கதேசம், மாலத்தீவு, மொராக்கோ, பிஜீ, நார்வே, பிலிப்பைன்ஸ், அர்ஜெண்டினா, நைஜீரியா,  பெரு, கயானா, மேற்கு ஆப்ரிக்க நாடுகளான நைஜர், டோகோ நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்குமாறு கேட்டுள்ளோம். இந்த குழுவினர் காஷ்மீர் அரசியல்  தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பேசுவர் என்றும் கூறினார்.

16 நாடுகளின் தூதர்கள் காஷ்மீர் வருகை:

இதற்கிடையே, சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்தும், காஷ்மீரின் நிலை குறித்து தெரிந்துகொள்ள, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட 16  நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கொண்ட குழுவினர், 2 நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். முதல் நாளான இன்று  இக்குழுவினர் ஸ்ரீநகரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து நாளை ஜம்முவில் துணை நிலை கவர்னர் முர்முவை சந்தித்து பேசுகின்றனர்.  பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இவர்கள், 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, டெல்லிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

தூதர்கள் வருகையால் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் 23 பேர் கொண்ட ஐரோப்பி யூனியன் எம்.பி.க்கள் குழுவினர் தனிப்பட்ட பயணமாக காஷ்மீருக்கு வருகை தந்து, அங்கு நிலவும் சூழல் குறித்து  ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: