சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட பீகார் அரசு காப்பகங்களில் கொலைகள் நடக்கவில்லை : உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

புதுடெல்லி: ‘பீகார் மாநிலத்தில் அரசு காப்பக சிறுமிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. பீகார்  மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் காப்பகத்தில்  29 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, டாடா சமூக அறிவியல்  நிறுவனம் நடத்தி ஆய்வில் தெரிய வந்தது. இதில், 11 சிறுமிகள்  கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி,  இம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். அதன்படி, இதை விசாரித்த சிபிஐ  அதிகாரிகள், காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்கூர் உட்பட 21  பேரை கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சிபிஐ தரப்பில் விசாரணையின் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், சிபிஐ தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பீகாரில் 17 அரசு  காப்பகங்களில் தங்கி இருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு  தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இவற்றில் 14 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. மற்ற 4 வழக்குகளில், ஆரம்பக் கட்ட விசாரணையிலேயே ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்ததால், அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அரசு காப்பகத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு எலும்பு  கூடுகள் சிறுமிகளுடையது அல்ல. அது ஒரு ஆண் மற்றும் பெண் உடையது. கொலை  செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளும் உயிருடன் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,’’ என வாதிட்டார். இதைத் தொடர்ந்து,  விசாரணை குழுவில் இருந்த அதிகாரிகள் இருவரையும் விடுவிக்க கோரிய சிபிஐ.யின்  கோரிக்கையை நீதிபதிகள் அமர்வு ஏற்றுக் கொண்டது.

Related Stories: