மாட்டு கொட்டகையாக மாறும் கான்பெட் பெட்ரோல் பங்க்குகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு துறை சார்பில் சாரம், திலாஸ்பேட், வில்லியனூர், உத்திரவாகினிபேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கான்பெட் பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டு வந்தன. இந்த பெட்ரோல் பங்க்குகளில் ஒருசிலவற்றை தவிர்த்து பெரும்பாலானவை தற்போது மூடப்பட்டு விட்டன.  திறமையற்ற நிர்வாகம், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த பெட்ரோல் பங்க்குகள் செயல்பாடற்று மூடிக் கிடப்பதாக கூறப்பட்ட நிலையில் அமுதசுரபி பங்கிற்கு ரூ.2.30 கோடி பாக்கி காரணமாக அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாத அவலம் ஏற்பட்டு முதல்வர் நாராயணசாமி தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு கண்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் மூடப்பட்டு கிடக்கும் கான்பெட் பெட்ரோல் பங்க்குகளில் பெரும்பாலானவை மாட்டு கொட்டகையாக காட்சியளிக்கிறது.

சாரம் பெட்ரோல் பங்கை தினமும் பகலில் மாடுகள் ஆக்கிரமித்து ஓய்வெடுத்து செல்லும் அவலத்தை பார்க்க முடிகிறது. இதேபோல் மற்ற பங்குகள் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கூடாரமாக மாற்றப்பட்டு வருகின்றன.  இந்த பங்க்குகள் அமைக்க லட்சக்கணக்கில் அரசு பணம் செலவிடப்பட்ட நிலையில், தற்போது அவை பராமரிப்பின்றி கிடப்பதால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இவ்விஷயத்தில் தலையிட்டு கூட்டுறவு பெட்ரோல் பங்க்குகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இவற்றில் பெரும்பாலான பங்க்குகள் லாபத்தில் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: