மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ஏற்று புதுச்சேரி காவல் நிலையங்களில் சர்தார் வல்லபாய் படேல் படம்: அரசு அலுவலகங்களிலும் விரைவில்!

புதுச்சேரி: புதுச்சேரி காவல் நிலையங்களில் சர்தார் வல்லபாய் படேல் படம் வைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய உள்துறை உத்தரவின்படி புதுச்சேரியிலுள்ள காவல் நிலையங்களில் சர்தார் வல்லபாய் படேல் படம் வைக்கப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல்துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சர்தார் வல்லபாய் படேல். மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைந்த பிறகு, படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் பிரம்மாண்ட சிலையை பிரதமர் மோடி நிறுவினார்.

3,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தச் சிலையை பிரதமர் மோடியே திறந்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரை, பா.ஜ.க ஏன் சொந்தம் கொண்டாட வேண்டும் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. `பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 1.5 கோடி படேல் சமூகத்தினரிடம் நிலவும் அதிருப்தியை சரிகட்டத்தான் பா.ஜ.க-வினர் திடீரென்று படேலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் கிளம்பின.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி காவல்துறை தலைமைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் சர்தார் வல்லபாய் படேலின் உருவப் படத்தை வைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலுள்ள காவல் நிலையங்களில் படேல் உருவப்படம் வைக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களிலும் விரைவில் இதேபோல் படம் வைக்கவும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Related Stories: