ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே நெகிழ்ச்சி: துப்புரவு பணியாளராக பணியாற்றிய அதே பஞ்சாயத்தின் தலைவராக பதவியேற்ற மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர்: துப்புரவு பணியாளராக பணியாற்றிய அதே பஞ்சாயத்தின் தலைவராக பதவியேற்றுக்கொண்ட சரஸ்வதி என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் ஊராட்சியில் அரசு ஊழியராக துப்புரவு பணி செய்து வந்தவர் சரஸ்வதி. இவர், தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அரசு வேலையை பறிகொடுத்து ஏமாற்றத்தில் இருந்தார். தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சரஸ்வதி, தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கான்சாபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்ட நிலையில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி, ஆயிரத்து113 வாக்குகள் பெற்று 213  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், துப்புரவு பணியாளராக பணியாற்றி அதே பஞ்சாயத்தின் தலைவராக சரஸ்வதி இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: