சுரங்கத்தில் புகுந்து காப்பர் கம்பி திருடியதை தடுத்த என்எல்சி பாதுகாப்பு படைவீரரை கத்தியால் குத்திய கஞ்சா வியாபாரி: வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்

நெய்வேலி:  நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் புகுந்து காப்பர் கம்பிகளை வெட்டிக்கொண்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி, பிடிக்க முயன்ற தொழில் பாதுகாப்புப்படை வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.  கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-15 என்எல்சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன் (30). இவர் என்எல்சி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று  முன்தினம் பணியில் இருந்தபோது அங்கு வந்த மந்தாரக்குப்பம் ஒம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த மணி (எ) கஞ்சாமணி என்பவர் சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற முயற்சித்துள்ளார்.  

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் செல்வகுமார் கஞ்சாமணியை பிடிக்க முயற்சித்தபோது அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரன் மீது குத்திவிட்டு அங்கிருந்து  தப்பி சென்றுவிட்டான். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீஸ்காரரை கத்தியை காட்டி  மிரட்டியதும், பின்னர் குத்திவிட்டு தப்பிய காட்சியை அருகில் நின்றவர்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மந்தாரக்குப்பம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான கஞ்சாமணியை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடிய கஞ்சாமணி மீது மந்தாரக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: