பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் டாப்சிலிப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்: யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்

பொள்ளாச்சி:  தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு விடுமுறை உள்ளாட்சி தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டதால் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளில் ஒன்றான உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப்புக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். இங்கு வருவோர் அடந்த வனப்பகுதியை சுற்றி பார்ப்பதுடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் யானை சவாரி செய்து மகிழ்கின்றனர்.

கடந்த மாதம் துவக்கத்தில், டாப்சிலிப்பில் யானை சவாரி தொடர்ந்திருந்தாலும், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், ஒரு கும்கி யானையே சவாரிக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் டாப்சிலிப்பை சுற்றிபார்க்க குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடும்பத்துடன் ஏராளமானோர் வருகை தந்தனர்.  இதில் பெரும்பாலும் வெளியூர் சுற்றுலா பயணிகளே வந்துள்ளனர். இப்படி கடந்த 21ம் தேதி முதல் நேற்று 30ம் தேதி வரை என தொடர்ந்து 10 நாட்களில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இவர்களில் பலர், அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி இயற்கை அழகை ரசித்தனர்.

மேலும், டாப்சிலிப்புக்கு வந்த பலரும் ஆர்வத்துடன் யானை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இதற்காக, இரண்டு கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டிருந்தது.  நேற்று விடுமுறை நாளையொட்டி வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் யானை சவாரி செய்தும், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு சென்று வந்தனர். தற்போது, மழைபொழிவு இல்லாததால் தொடர்ந்து யானை சவாரி இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: