கோயில் விழாவின்போது எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்து இறப்பு ஏற்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அறிக்கை அளிக்க மண்டல இணை ஆணையர்களுக்கு கமிஷனர் உத்தரவு

சென்னை: கோயில் விழாக்களின் போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்க கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, தற்ேபாது சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.கோட்டீஸ்வரி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கோயில்களுக்கு சொந்தமான குளங்களில் பக்தர்கள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுவதை தடுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளார்.  அதன்பேரில் சென்னை உயர் நீதிமன்றம், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்கும் கோயில் விழாக்களில் குளங்களில் பக்தர்கள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழப்பதை தடுத்திட என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தினை கோயில் வாரியாக தற்போதைய நிலைப்பாட்டினை அறிக்கையாக உயர் நீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கீழ்க்கண்ட வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி தவறாது செயல்படுத்த வேண்டும் என அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.  திருக்குளங்களில் பாதுகாப்பற்ற பகுதி குறித்து எச்சரிக்கையினை பக்தர்களுக்கு தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே நிறுவுதல் வேண்டும். nதெப்பத்திருவிழாவின் போது, பக்தர்கள் திருக்குளத்தில் தவறி விழுவதை தவிர்த்திட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி அவர்கள் மூலம் பாதுகாப்பு வளையம் அமைத்திடல் வேண்டும். nதெப்பத்திருவிழாவின் போது தெப்பத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்வதை கண்டிப்பாக தவிர்த்திடல் வேண்டும். n தெப்பத்திருவிழா நடைபெறும் சமயம் பக்தர்கள் பாதுகாப்பு கருதி திருக்குளத்தின் அருகே தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழுவினை பணியாற்றிட செய்தல் வேண்டும்.

நீச்சல் நன்கு தெரிந்த நபர்களையும் கண்டறிந்து அவர்களையும் திருக்குளத்திற்கு அருகில் தெப்பத்திருவிழா நாளன்று உதவிக்கு வைத்திருத்தல் வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தியவாறு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடும் கோயில் விழாக்களில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விவரங்களையும், எடுக்க வேண்டிய நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக அனுப்பி வைக்க மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.பட்டியலை சார்ந்த கோயில்கள் மற்றும் பட்டியலை சாராத கோயில்களுக்கு குளங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு மண்டல இணை ஆணையரே பொறுப்பாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மண்டல இணை ஆணையர்களை தங்களது மண்டலத்தில் உள்ள அனைத்து கோயில் குளங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: