லாபுஷேன் அபார சதம் ஆஸி. ரன் குவிப்பு

சிட்னி: நியூசிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்துள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். பர்ன்ஸ் 18 ரன் எடுத்து கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் டெய்லர் வசம் பிடிபட்டார். வார்னர் - லாபுஷேன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தது. வார்னர் 45 ரன் எடுத்து வேக்னர் பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து லாபுஷேனுடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 156 ரன் சேர்த்தது. ஸ்மித் 63 ரன் (182 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்துள்ளது (90 ஓவர்). லாபுஷேன் 130 ரன் (210 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), மேத்யூ வேடு 22 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் 2, வேக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: