ஊத்துக்கோட்டை அருகே நள்ளிரவில் சோகம் கால்வாயில் வேன் கவிழ்ந்து பாட்டி, பேத்தி பரிதாப பலி: 4 பேர் உயிர்தப்பினர்

சென்னை: ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலை எட்டிகுளம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசபாண்டியன் (45). பிஸ்கட் கடை நடத்தி வருகிறார்.  இவர், தனது  தாயார் தெய்வானை (65), மனைவி பாக்கியலட்சுமி (40), மகன் மோனீஸ்வரன் (15), மகள் வைஷ்ணவி (17) மற்றும் உறவினர் சீனிவாசன் (40) ஆகியோருடன் ஓம்னி வேனில் தனது  மைத்துனர் சரவணன் மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்னை வண்ணாரப்பேட்டைக்கு சென்றார். பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் நள்ளிரவு  1 மணிக்கு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் அருகே வந்தபோது தூக்க கலக்கத்தில் இருந்ததால் முருகேசபாண்டியன் ஓட்டி வந்த வேன் திடீரென ஆந்திராவில் இருந்து பூண்டிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாய்க்குள் பாய்ந்தது. பின்னர் வேன் தண்ணீருக்குள் மூழ்க தொடங்கியது.

இதில் முருகேச பாண்டியன், அவரது மனைவி பாக்கியலட்சுமி, மகன் மோனீஸ்வரன், உறவினர் சீனிவாசன் ஆகியோர் லாவகமாக வெளியே வந்து வேன் மீது ஏறி நின்று, ‘காப்பாற்றுங்கள்’ ‘காப்பாற்றுங்கள்’ என்று கதறினர். இதை பார்த்த அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலீஸ் உதவியுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் காப்பாற்றினர். ஆனால் வேனுக்குள் சிக்கிய தெய்வானை மற்றும் வைஷ்ணவி ஆகியோர் மூச்சு திணறி இறந்து விட்டதால் சடலமாக மீட்டனர். பின்னர், அவர்களது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார்   அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஊத்துக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டோ கவிழ்ந்து 13 பேர் காயம்

ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த ரூமா (40), விஜயா (30), லலிதா (50), தீபா (30), ஜெயா (50) உள்ளிட்ட 13 பேர் நேற்று காலை  போந்தவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் பூண்டி நோக்கி கூலி வேலைக்கு சென்றனர். போந்தவாக்கம் வங்கி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறிய ஷேர் ஆட்டோ எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற 13 பேரும் காயம் அடைந்து அலறினர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவர்களை காப்பாற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான  ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: