கடந்த ஆண்டில் உலகளவில் விமான விபத்துகள் பாதியாக குறைந்தது: ஆய்வில் தகவல்

பிராங்க்பர்ட்: உலகளவில் கடந்தாண்டு விமான விபத்துகளும், பலி எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளன. விமானத்தில் ஏற்படும் இயந்திரக் கோளாறு உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகளினாலும், உள்கட்டமைப்பு தோல்வியினாலும் விமான விபத்துகள் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   இந்நிலையில், நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், `டூ 70’ என்ற விமான சேவை ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்ட கடந்த ஆண்டிற்கான விமான விபத்து ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் கடந்தாண்டில் விமான விபத்துகள் பாதியாக குறைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 13 விமான விபத்துகளில் 534 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், கடந்தாண்டு மொத்தம் 8 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 257 பேர் இறந்துள்ளனர்.

இதில், கடந்த மாதம் பெக் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தானில் இருந்து புறப்படும் போது ஏற்பட்ட விபத்தில் மட்டும் 12 பேர் பலியாயினர். அதே போன்று, எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் இறந்தனர். இதுவே கடந்தாண்டின் மிக மோசமான விமான விபத்தாக கருதப்படுகிறது.விமான விபத்துகளின் சதவீதம் 2019ல் 0.18 ஆகவும், 2018ம் ஆண்டு 0.30 சதவீதமாகவும் உள்ளது. ஆனால், இது கடந்த 2017ம் ஆண்டை போல் ஒட்டு மொத்தமாக குறையவில்லை. கடந்த 2017ம் ஆண்டு நடந்த 2 விமான விபத்துகளில் 13 பேர் மட்டுமே பலியாயினர். இதுவே, விமான விபத்துகள் வரலாற்றில் மிக குறைந்த விபத்து ஆண்டாக பதிவாகி உள்ளது.விமான நிறுவனங்கள் சிறந்த உள்கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்ட விமானங்களை கொள்முதல் செய்து, விமானிகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே விமான விபத்துகளை குறைக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: