ரயில் கட்டணம், விலை உயர்வு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: ரயில் கட்டணம் மற்றும் காஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. புத்தாண்டில் ரயில் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வரை உயர்த்தப்பட்டன. இதுபோல், வீட்டு உபயோக சமையல் காஸ் விலை, தொடர்ந்து 5வது மாதமாக நடப்பு மாதத்துக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், ‘‘பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கும்போது இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கேலிக்கூத்து எப்போது முடிவுக்கு வரும்?. இது ஏழை மக்கள் மீது இழக்கப்பட்டுள்ள அநீதி. சாமானிய மனிதனுக்கு இப்படி ஒரு புத்தாண்டு பரிசு வழங்கியது நியாயம்தானா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‘‘ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, மக்களின் வாழ்வாதாரம் மீது மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேலை இழப்பு, உணவு பொருட்கள் விலையேற்றம், ஊரக பகுதிகளில் வருவாய் சரிவு ஆகியவற்றை தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. ரயில் கட்டண உயர்வு மோடி அரசின் புத்தாண்டு பரிசு’’ என கூறியுள்ளார்.

Related Stories: