எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் நடவடிக்கைகள் முக்கியம் : வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்

பியாங்யாங்: எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் நடவடிக்கைகள் முக்கியம் என்று வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார். இதனால் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களை சோதனை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு, வடகொரியா ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆலோசனை நடத்தினார்.

சனிக்கிழமை அன்று திடீரென ஆலோசனை கூட்டம் தொடங்கியது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கிம் ஜாங் அன்னின் தலைமையில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நேற்று வரை தொடர்ந்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு படைகள் ஆகியவை தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதற்கு நேர்மறையான மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம் என்பதை கிம் ஜாங் அன் வலியுறுத்தியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: