கடற்படை அதிகாரிகள் பேஸ்புக், ஸ்மார்ட் போன் பயன்படுத்த அதிரடி தடை

புதுடெல்லி: கடற்படை அதிகாரிகள் பேஸ்புக் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதனால் சமூக வலைதளங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவை இல்லாமல் ஒரு நபரால் இருக்கவே முடியாது என்பதுபோன்ற மாயை இளைஞர்களிடம் மட்டுமின்றி, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.அதேசமயம், இந்த சமூக வலைதளங்கள் மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களும் சர்வசாதாரணமாக மூன்றாம் நபர்களுக்கு சென்றுவிடுகின்றன. இவற்றின் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியாமல் உளவு பார்க்கும் வேலைகளும் மறைமுகமாக நடந்து வருகின்றன.

இதனால் ஸ்மார்ட் போன்கள், பாதுகாப்பு மிக்க இடங்களில் பெரிய ஆபத்தாகவே மாறி வருகின்றன. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 7 கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சமூக ஊடகங்கள் மூலம்தான் தங்களுடைய தகவல்களை பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது.இ்ந்நிலையில், பாதுகாப்பு கருதி, இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரிகள் அனைவரும் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு கடற்படை தடை விதித்துள்ளது. கடற்படை தளங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் போர் கப்பல்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: