திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக அமைத்திருந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அகற்றம்: பயன்பாட்டிற்கு வரும் முன்பே அகற்றியதால் பக்தர்கள் வேதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்  பயன்பாட்டிற்கு வரும் முன்பே அகற்றப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பொதுமக்கள் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிரிவலம் பாதையில் பக்தர்களின் வசதிக்காக காஞ்சி சாலையில் அபயமண்டபம் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலைய மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது.

ஆனால், இம்மையம் அமைக்கப்பட்டு நாள் முதல் பல மாதங்களாக பக்தர்களின் வசதிக்காக கொண்டு வரப்படாமல் காட்சி பொருளாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் சில நாட்கள் மட்டுமே இம்மையம் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நவீன வசதிக்கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திடீரென அகற்றப்பட்டது. பல மாதங்களாக பணிகள் மேற்கொண்டு பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பயன்பாட்டிற்கு வராமலே அங்கிருந்து அகற்றப்பட்டதால் பக்தர்கள் பெரும் வேதனை தெரிவித்தனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `கிரிவலப்பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் இல்லாமல் உள்ளது.

இங்கு அமைக்கப்பட்ட குடிநீர் நிலையம் பக்தர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்று இருந்தோம். விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என இருந்த நிலையில் தற்போது, இங்கிருந்த குடிநீர் நிலையம் அகற்றப்பட்டுள்ளது. பல லட்சம் செலவழித்து மேற்கொள்ளப்பட்டு, இப்படி பயன்பாட்டிற்கு வராமலே அதிகாரிகள் அகற்றியது பெரும் வேதனைக்குரியதாக உள்ளது’ என்றனர்.

Related Stories: