தேவஸ்தான பட்ஜெட் ரூ.3243.19 கோடியாக அதிகரிப்பு: ஜம்மு, வாரணாசி, மும்பையில் புதிய ஏழுமலையான் கோயில்: அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

திருமலை: ஜம்மு-காஷ்மீர், வாரணாசி மற்றும் மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு கூட்டம், அதன் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், சுப்பா ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான ஜனவரி 6, துவாதசியான ஜனவரி 7ம் தேதிகளில் சம்பிரதாய முறைப்படி பரமபத வாயில் எனும் வைகுண்ட வாயில் வழியாக, எவ்வளவு பக்தர்களை அனுமதிக்க முடியுமோ அவ்வளவு  பேரையும் தரிசனத்துக்கு அனுமதிக்க  ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 2019-2020ம் ஆண்டிற்கான தேவஸ்தான பட்ஜெட் ரூ.3116.25 கோடியில் இருந்து ரூ.3243.19 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.1,231 கோடி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதனை ரூ.1,285 கோடியாகவும், பிரசாத விற்பனையின் மூலம் ₹270 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.330 கோடியாக  உயர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.30 கோடியில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இக்கோயிலை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவதூறு பரப்புவதை தடுக்க சைபர் பாதுகாப்பு பிரிவு

தேவஸ்தானத்தின் மீதான அவதூறு பிரசாரங்களை தடுப்பதற்காக, ‘சைபர் பாதுகாப்பு பிரிவு’ ஏற்பாடு செய்யப்படுகிறது. காவல்துறையுடன் இணைந்து பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த பிரிவு செயல்படுத்தப்பட  உள்ளது. மேலும், தேவஸ்தானம் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பிரபல தெலுங்கு பத்திரிகை மீது ₹100 கோடி மானநஷ்டஈடு வழக்கு தொடரவும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: