கஞ்சா போதையில் இயக்கியதால் விபரீதம் தறிகெட்டு ஓடிய கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி: இளம் ரியல் எஸ்டேட் அதிபர் கைது,.. வள்ளுவர்கோட்டம் அருகே பரபரப்பு

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா போதையில் இருந்த இளம் ரியல் எஸ்டேட் அதிபரை கைது ெசய்தனர். வேலூர் மாவட்டம் கன்னமங்கலத்தை சேர்ந்தவர் மன்னார்சாமி (60). முன்னாள் ராணுவ வீரர். சென்னை நுங்கம்பாக்கம் நீர் ஏற்றும் நிலையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.  நேற்று இரவு பணிக்கு வந்த மன்னார்சாமி நேற்று காலை 6.30 மணிக்கு டீ குடிக்க வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள கடைக்கு வந்தார். டீ குடித்த பிறகு மீண்டும் பணிக்கு செல்ல கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது மின்னல் வேகத்தில் தாறுமாறாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மற்றும் சாலையோர மரத்தில் மோதி சாலையை கடக்க முயன்ற மன்னார்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் சினிமா காட்சி போல் நடந்த விபத்தால் வள்ளுவர்கோட்டம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். காரில் வந்த 5 பேரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சுயநினைவு இன்றி காரில் இருந்ததும் தெரியவந்தது. பொதுமக்கள் ஒன்று கூடியதை பார்த்த அவர்கள் அனைவரும் அருகில் இருந்து இரும்பு கம்பிகளை எடுத்து யாரும் அருகில் வரக்கூடாது என்று மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் போதையில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த அரும்பாக்கத்தை சேர்ந்த இளம் ரியல் எஸ்டேட் அதிபர் பொன் கிரண்ராஜ் (23) என்பவரை கைது செய்தனர். மேலும், உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் மன்னார்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காரில் கஞ்சா போதையில் இருந்த மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: