இந்திய பேட்மிண்டனின் சில வீரர்களுக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வே இல்லை; பயிற்சியாளர் லிம்பேலே போர்க்கொடி

ஜகார்த்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்திய பேட்மிண்டனின் சிறப்பு இரட்டையர் பயிற்சியாளர் ஃப்ளாண்டி லிம்பேலே, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் சில வீரர்களின் மோசமான அணுகுமுறையால், முந்தைய மூன்று வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்கள் முடிவடைவதற்கு முன்னர் வெளியேறிவிட்டனர். இது வீரர்களுக்கும், அணிக்கும் உகந்தது அல்ல. முந்தைய பயிற்சியாளர்கள் உணர்ந்ததை என்னாலும் உணர முடிந்தது. ஏனென்றால் இந்த அணுகுமுறை விஷயம் இந்தியாவில் மிகவும் தனித்துவமானது. வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை விரைவாக முடிப்பது பொதுவான மரபு என்றே தோன்றுகிறது.

எனவே, இது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இந்திய முன்னாள் ஒற்றையர் பயிற்சியாளர்கள் கிம் மற்றும் முலியோ போன்றோர் ஒப்பந்தத்துக்கு முன்பே விலகிவிட்டனர். சில வீரர்கள் தனி மனிதர்களாக விளையாடுகின்றனர். குழு வேலை இல்லாததால், அவர்கள் தனிப்பட்ட சுயத்தை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். இரட்டையரில், அதை செய்ய முடியாது. சில வீரர்கள் மோசமான அணுகுமுறை ஏன் பின்பற்றுகின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு கலாசாரமாக மாறவாய்ப்புள்ளது. நான்  இதனை மாற்ற முயற்சிக்கிறேன். ஏனென்றால் இரட்டையர் பிரிவில்  தனிப்பட்ட வீரர்களைக் மையப்படுத்தி செயல்பட முடியாது.

அது முடியவில்லை என்றால், நானும் வெளியேற வேண்டியதுதான். இப்படியே போனால் எந்த வெளிநாட்டு  பயிற்சியாளரும் நீண்ட காலம் தங்க தயாராக இருக்க மாட்டார்கள். இதுவரை யாரும் என்னை அவமதிக்கவில்லை. ஆனால், இந்திய வீரர்களுக்கு வெளிநாட்டு  பயிற்சியாளர்கள் மீது நன்றியுணர்வு இல்லை. மோசமான அணுகுமுறை என்பது  பயிற்சியின் குறைபாடு; அல்லது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது;  அல்லது கடினமாக உழைக்காததுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிறந்த ஜோடிகளுக்கு பயிற்சியளிக்கும் இவர், சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, அஸ்வினி பொனப்பா, சிக்கி ரெட்டி மற்றும் பிரணவ் ஜெர்ரி சோப்டா போன்றோரில் எவரது பெயரையும் குறிப்பிடவில்லை.

Related Stories: