கோவையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

கோவை: கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான சதீஷ்-வனிதா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். முதல் குழந்தை ரிதன்யாஸ்ரீ(6). இவர், திப்பனூர் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 25ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். இரவு முழுவதும் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தடாகம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 26ம்தேதி காலை சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள மறைவான சிறிய சந்து பகுதியில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்டு, கை கால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலில் கத்தியால் கீறிய காயங்கள் இருந்தன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தடாகம் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக, தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு கூறப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதற்கு மாதர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சிறுமி பலாத்கார வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று புலன் விசாரணை நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி சந்தோஷ்குமார் தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சிறுமியின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: