சட்டத்தை திரும்ப பெறும் வரை அமைதிப் போராட்டம் தொடரும்: மம்தா எச்சரிக்கை

புதுடெல்லி: `குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் வரை, அதற்கு எதிரான அமைதிப் போராட்டங்கள் தொடரும்,’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த வாரத்தில் 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், முதல்வர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் உள்ள ராஜா பஜாரில் இருந்து முலிக் பஜார் வரை, சிஏஏ, என்ஆர்சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரணி நடந்தது. அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் பாஜ.வினரால் அச்சுறுத்தப்படுகின்றனர். மாணவர்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்தாமல் முன்னெடுத்து செல்ல வேண்டும். சிஏஏ, என்ஆர்சி.க்கு எதிரான ஜமியா மிலியா இஸ்லாமியா, ஐஐடி கான்பூர், இதர பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்துக்கு நாங்கள் தோள் கொடுப்போம். நீங்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம். நெருப்புடன் விளையாடுவதை பாஜ நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை, மத்திய அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: