1ம் வகுப்பு முதல் பிஎச்டி வரை படிக்கலாம் திருநங்கைகளுக்காக நாட்டில் முதல் பல்கலை: உத்தரப்பிரதேசத்தில் அமைகிறது

கோரக்பூர்: திருநங்கைகள் கல்வி பயில வசதியாக நாட்டின் முதல் திருநங்கைகள் பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.  மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் பெரும்பாலும் கல்வியற்றவர்களாக இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் பிச்சை எடுக்கும் தொழிலை மேற்கொள்கின்றனர். இதை தவிர்த்து அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து இந்திய திருநங்கைகள் கல்வி சேவை அறக்கட்டளை அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக திருநங்கைகளுக்கு என நாட்டின் முதல் பல்கலைக்கழகத்தை குஷிநகர் மாவட்டத்தின் பசில்நகரில் அமைக்க திட்டமிட்டுள்ளது.  இங்கு திருநங்கைகள் 1ம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிக்கலாம். இது தவிர அவர்கள் ஆராய்ச்சி படிப்பும் படிக்கலாம்.

இதுகுறித்து அறக்கட்டளை தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கைகள் கல்வி பயில்வதற்கு வசதியாக பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது. இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி விட்டது.  வரும் ஜனவரி 15ம் தேதி இந்த பிரிவை சேர்ந்த 2 குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் மார்ச் மாதம் பிறவகுப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் திருநங்கைகள் ஒன்று முதல் பிஎச்டி வரை படிக்கலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். திருநங்கை குட்டி கின்னார் இதை வரவேற்று கூறுகையில், `இந்த பல்கலைக்கழகம் மூலம் நாங்கள் கல்வி கற்க முடியும் என்பதோடு சமூகத்தில் மரியாதையையும் பெறமுடியும்’ என்றார்.

Related Stories: