சென்னை புறநகர் பேரூராட்சிகளில் கட்டிட வரையாளர்கள் பணியிடம் காலி: பணிகள் தேக்கமடையும் அவலம்

பல்லாவரம்: சென்னை புறநகர் பேரூராட்சிகளில் கட்டிட வரையாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்படுவதுடன், அரசின் கட்டிட பணிகள் தேக்கமடைந்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. மேலும், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்தப் பகுதிகளில் அமைந்துள்ளன. சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ளதாலும், நினைத்த நேரத்தில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு எளிதாக சென்று வரமுடிவதாலும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பொதுமக்கள் அதிகப்படியாக இந்த புறநகர் பகுதிகளில் குடியேறி வருகின்றனர்.  

இதன்காரணமாக குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பேரூராட்சிகளில் போதிய திட்ட வல்லூநர்கள் இல்லாததால், புதிதாக கட்டிப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தற்போது குன்றத்தூர், மாங்காடு ஆகிய பேரூராட்சிகளுக்கென்று ஒரேயொரு கட்டிட வரையாளர் மட்டுமே பணியில் உள்ளார். அவரும் தினமும் அலுவலகத்திற்கு வராமல், வியாழக்கிழமை மட்டுமே வருகை தருகின்றார்.

இதனால், புதிய கட்டிடம் கட்டுவதற்காக மற்றும் பழைய கட்டிடங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி கட்டிட வரையாளரின் அனுமதியை பெற முடியாமல் பொதுமக்கள் தினமும் அவதியுற்று வருகின்றனர். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கட்டிட வரையாளர் வருவதால் நாள்தோறும் ஏராளமான பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டால், ஒரேயொரு கட்டிட வரையாளர் மட்டுமே இருப்பதால், அவர் மட்டுமே குன்றத்தூர், மாங்காடு, படப்பை, திருமழிசை ஆகிய நான்கு பஞ்சாயத்துக்களை சுழற்சி முறையில் பார்த்து வருகிறார்.

இதனால், அந்த கட்டிட வரையாளரால் தினமும் ஒரே பஞ்சாயத்திற்கு வேலைக்கு வர முடிவதில்லை. நாங்கள் என்ன செய்ய என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இத்தனைக்கும் இந்த பேரூட்சிகள் மூலமாக அரசுக்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் வருவாயாக கிடைக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, அரசு தற்போது பற்றாக்குறையாக உள்ள கட்டிட வரையாளர்கள் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பொதுமக்களும் தினமும் தேவையில்லாமல் அழைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். தற்போது, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வேளையில், முறையான திட்ட வல்லுநர்களை நியமனம் செய்வதுடன், பொதுமக்களுக்கு முறையான சேவையளித்து, அரசின் ஆண்டு வருமானத்தை பெருக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: