சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா கோலாகலம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சன்னதி உள்ளது. இங்கு ஒரே கல்லில் அமைக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் உள்ளார். ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இங்கு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டைய ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு காலபைரவருக்கு தீபாராதனை நடந்தது.

இன்று காலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம், 8 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள், அரிசி மாவு, நெய், இளநீர், பன்னீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, எலுமிச்சம் சாறு, விபூதி, கும்குமம், களபம், சந்தனம் ஆகிய 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடந்தது.காலை 10 மணி முதல் கோயில் அருகே கலையரங்கத்திலும், எஸ்எம்எஸ்எம் மேல்நிலைப்பள்ளியிலும் அன்னதானம் தொடங்கியது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதன நடந்தது. மாலை 6 மணிக்கு ராமருக்கு புஷ்பாபிஷேகம், 7 மணிக்கு வாடாமல்லி, கிரேந்தி நீங்கலாக மல்லிகை, ரோஜா உள்ளிட்ட வாசனை மலர்களால் ஆஞ்சநேயர் சுவாமி கழுத்து வரை புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் உள்ளூர் மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவல் குழு தலைவர் சிவ குற்றாலம், அறங்காவல் குழு உறுப்பினர்கள், கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் சண்முகம்பிள்ளை உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.  விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ேமலும் அரசு பஸ்கள் தவிர அனைத்து வாகனங்களும் ஆஸ்ராமம் மற்றும் கற்காடு வழியாக 4 வழி சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Related Stories: