அதுகளுக்கும் வந்தாச்சுய்யா... வந்தாச்சு... பசுக்களுக்கும் ‘மேட்ரிமோனி சைட்’: மபி.யில் நூதன திட்டம் அறிமுகம்

போபால்:  பால் உற்பத்தியை அதிகரிக்க மத்தியப் பிரதேச மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக போபாலில் மாநகராட்சி சார்பில் காளைகள் விந்து உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு  16 இன காளைகள் மூலம் ஆண்டுக்கு 26 லட்சம் உறைந்த விந்து துளிகள் சேகரிக்கப்படுகிறது.  இந்த நிலையில் பசுக்களுக்கு இணையான காளைகளை தேர்வு செய்யும் வகையில், காளைகள் விவரங்கள் அடங்கிய  தகவல் தொகுப்பை மாநில கால்நடைத்துறை அமைச்சர் லக்கான் சிங் யாதவ் கடந்த வாரம் வெளியிட்டார்.  இதில் 200 காளைகளின் குடும்ப பின்னணி, காளைகளுக்கு உள்ள நோய்கள், காளைகளின் தாய்பசு கறந்த பாலின் அளவு உள்ளிட்ட தகவல்கள் 3 தலைப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த தகவல்கள் ஒவ்வொரு மாதமும் மேம்படுத்தப்படும். பின்னர் இந்த தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.  

போபாலில் உள்ள மத்திய விந்து மையத்துக்கு கொண்டு வரப்படும் இந்த 200 காளைகளில் இருந்து தங்கள் பசுவுக்கு இணையான ஜோடியை பசு உரிமையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.  இந்த பட்டியலை வெளியிட்டு கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் பேசுகையில், `‘உள்நாட்டு கால்நடைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்’’ என தெரிவித்தார்.

Related Stories: