பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை வேண்டும் : இந்தியாவிற்கு சர்வதேச நிதி ஆணையம் அறிவுறுத்தல்

வாஷிங்டன் : இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை வேண்டும் என்று சர்வதேச நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நுகர்வுதிறன் முதலீடுகளில் சரிவை சந்தித்து இருப்பதுடன் வரி வருவாயும் குறைந்துள்ளதால் உலகின் அதிவேக வளர்ச்சியைக் கொண்ட இந்திய பொருளாதாரத்திற்கு தடை ஏற்பட்டு இருப்பதாக சர்வதேச நிதி ஆணையத்தின் ஆண்டு ஆய்வு கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோரை ஏழ்மையில் இருந்து மீட்டெடுத்த இந்தியா தற்போது பொருளாதார மந்தநிலையில் சிக்கி இருப்பதாக அந்த அமைப்பின் ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்திய அதிகாரி ரணில் சல்கடோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய வீழ்ச்சியில் இருந்து மீண்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிக்க பொருளாதார கொள்கை சார்ந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். பொருளாதார மந்தநிலை தொடரும் பட்சத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு புத்துயிர் ஊட்டுவதுடன் நிகித்துறையை மறு கட்டமைப்பு செய்வது அவசியம் என்றும் ரணில் அறிவுறுத்தியுள்ளார். அதீத கடன் மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் காரணமாக அரசுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: