திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

*ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 6ம் தேதி வைகுண்ட ஏகாதசி, 7ம் தேதி துவாதசியையொட்டி இரண்டு நாட்களுக்கு கோயிலில் உள்ள பரமபத வாயில் என்னும் வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 6ம் தேதி நள்ளிரவு 12.30 மணி முதல் 2 மணி வரை திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.

தொடர்ந்து தோமாலை, அர்ச்சனை, பஞ்சாங்கம் படிக்கப்பட்டு வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பின்னர் காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்கரதத்தில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மாலை 5 மணி முதல் 7 மணி வரை சகஸ்ர தீப அலங்கார  சேவை நடைபெற உள்ளது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இரவு 8.30 முதல்  9.30 மணி வரை ரங்கநாதர் மண்டபத்தில்  அத்தியாயன உற்சவம் நடைபெற உள்ளது. 7ம் தேதி துவாதசியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு சக்கரத்தாழ்வார் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வராக சுவாமி கோயிலில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி ஏழுமலையான் கோயிலில் 2 நாட்கள் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய ஆர்ஜித சேவைகள் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: