டிஷா கொலையாளிகள் சடலங்களுக்கு மறு பிரேத பரிசோதனை நடத்த டாக்டர் குழு அமைத்தது எய்ம்ஸ்

புதுடெல்லி: ஐதராபாத் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பலாத்கார குற்றவாளிகளின் சடலங்களுக்கு மறுபிரேத பரிசோதனை நடத்த, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவை அமைத்துள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் டிஷாவை 4 பேர் கும்பல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது. இதில் தொடர்புடைய 4 பேரையும் கடந்த 6ம் தேதி தெலங்கானா போலீசார் சுட்டுக் கொன்றனர். இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கும் நேரத்தில், இது போலி என்கவுன்டர் என தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், மறுபிரேத பரிசோதனை நடத்த தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இன்றைக்குள் மறுபிரேத பரிசோதனை செய்து, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு, இந்த மறுபிரேத பரிசோதனையை நடத்தவுள்ளது. இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தலைமையில், ஆதர்ஸ் குமார், அபிஷேக் யாதவ், வருண் சந்திரா ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவை எய்ம்ஸ் நிர்வாகம் அமைத்துள்ளது. இக்குழு ஐதராபாத் வந்து, மறுபிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

Related Stories: