பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப தாமதிப்பது நியாயம் அல்ல: சபாநாயகர் மீது டிரம்ப் குற்றச்சாட்டு

வெஸ்ட் பாம் பீச்: ‘‘பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப சபாநாயகர் நான்சி பெலோசி தாமதிப்பது நியாயம் அல்ல,’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனுக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதற்காக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நாடியதாக கூறப்படுகிறது. அவர் இப்படி செய்ததின் மூலம் அதிபர் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்புக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த பதவிநீக்க தீர்மானம் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதை செனட் சபையில் நிறைவேற்றினால் மட்டுமே அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியும். அங்கு ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், இந்த தீர்மானம் நிச்சயம் தோல்வியடையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் வெஸ்ட் பாம் பீச்சில், பழமைவாத மாணவர் மாநாட்டில் நேற்று பேசிய அதிபர் டிரம்ப், ‘‘என் மீதான பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பாமல், சபாநாயகர் நான்சி பெலோசி தாமதிக்கிறார். செனட் விவாதத்தில் ஜனநாயக கட்சியினர் திறம்பட செயல்பட அவகாசம் அளிப்பதற்காக, அவர் பதவிநீக்க தீர்மானத்தை அனுப்ப தாமதிக்கிறார். இது நியாயம் அல்ல. ஜனநாயக கட்சியினர் என கூறி கொள்பவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. 2016ம் ஆண்டு தேர்தல் முடிவை தூக்கி ஏறிய அவர்கள் முயற்சிக்கின்றனர். பிரதிநிதிகள் சபையில் நடந்த ஓட்டெடுப்பின் போது, எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரும், ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த பதவிநீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. ஜனநாயக கட்சி எம்பி.க்கள் சிலர்தான் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்,’’ என்றார்.

Related Stories: