இன்ஸ்பெக்டர் நடவடிக்கையால் பசுமை பூங்காவாக மாறிய வீரவநல்லூர் காவல் நிலையம்: பொதுமக்கள் வரவேற்பு

வீரவநல்லூர்:  பசுமை பூங்காவாக மாற்றி காவல் நிலையத்திற்கு தனி அடையாளம் கொடுத்த இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் சாம்சன். இவர், கடந்த பிப்ரவரி மாதம் பணகுடியில் இருந்து பணி மாறுதலாகி வீரவநல்லூருக்கு வந்தார். விலங்குகள் நல ஆர்வலரான சாம்சன், மரம் நடுதல், ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் ஏற்பாடு செய்து கொடுத்தல், பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடையே பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு கூர போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமுதாய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார். வீரவநல்லூர் இன்ஸ்பெக்டராக பதவியேற்ற நாள் முதல் காவல் நிலையத்தை மெல்ல மெல்ல இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாக உருமாற்றியுள்ளார். ஸ்டேசனின் வெளிப்புறம், உட்புறம், ஜன்னல்கள், மொட்டை மாடி பகுதிகளில் மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருகிறார். கோடை காலங்களில் பறவைகள் தண்ணீர் அருந்துவதற்கு ஏதுவாக மொட்டை மாடி மற்றும் ஸ்டேசனை சுற்றிலும் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளார்.  மியாட் வாட்ச் என்ற பெயரில் சிட்டுக்குருவிகள் போன்ற சிறிய வகை பறவைகள் தங்குவதற்கு ஏதுவாக மரக்கூண்டுகள் அமைத்து பறவைகள் வசிக்க ஏதுவாக ரம்மியமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளார். கண்ணிற்கு விருந்தளிக்க மீன் தொட்டிகள், தூய்மையான காற்றினை சுவாசிக்க மூலிகை செடிகள் என ஸ்டேசனை பசுமை பூங்காவாக உருமாற்றியுள்ளார்.

ஸ்டேசனுக்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கு காற்றோட்டமான இருக்கை வசதிகள், புகார் கொடுக்க மற்றும் வழக்கு விசாரனைக்காக வருவோரின் குழந்தைகளை மகிழ்விக்க விளையாட்டு உபகரணங்கள், சைக்கிள்கள் என வசதி செய்துள்ளார். ஸ்டேசன் வாசலிலும், ஸ்டேசனுக்கு வெளியே சாலையை ஒட்டியும் நிரந்தர தண்ணீர் பந்தல் அமைத்து முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளார். ஒரு இன்ஸ்பெக்டராக சட்டம் ஒழுங்கை முறையாக கடைபிடித்தும், சமூக ஆர்வலராக வீரவநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதியில் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து இதுவரை 2500 மரக்கன்றுகளும் நட்டுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாம்சனுக்கு பொதுமக்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: