காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் இடத்தை பிடிக்க போட்டி: குண்டு வீசி 2 ரவுடிகள் கொலை: திருவள்ளூரில் பயங்கரம்: எஸ்.பி. தலைமையில் 4 தனிப்படை அமைப்பு

சென்னை: திருவள்ளூர் அருகே பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் இரு ரவுடிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் தாதா தர் இடத்தை பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில், இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையில் உள்ளது பண்ணூர் கிராமம். சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு செல்லும் சாலையில் உள்ள இந்த கிராமம் வழியாக நேற்று காலை பைக்கில் இரண்டு வாலிபர்கள்  சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பின்னால் பைக்குகளில் வேகமாக வந்த 10 பேர் கொண்ட கும்பல்,  அவர்களது   பைக்கை வழிமறித்து, இருவர் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில், நிலைதடுமாறி இருவரும் பைக்கில் இருந்து விழுந்தனர். தொடர்ந்து அக்கும்பல் இருவரையும் அரிவாளால்  சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.  அத்துடன் கொலையானவர்களின் பைக்கையும், மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து  தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்பி., அரவிந்தன் தலைமையில் மப்பேடு போலீசார் விரைந்து வந்தனர்.  தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், போலீசார் இரு வாலிபர்களின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதரிடம் பணிபுரிந்து வந்த  ஜீவா(20), கோபி(24) என்பதும், ரவுடி ஸ்ரீதர் இடத்தை பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் இந்த கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதும்  தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதர், அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் செய்வதாகச் சொல்லி நிலத்தை அபகரிப்பது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த  2017ம் ஆண்டு கம்போடியாவில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இறந்த ரவுடி ஸ்ரீதரின் இடத்தை பிடிப்பதற்காக அவனிடம் டிரைவராக  பணிபுரிந்து வந்த தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாசலம் ஆகிய இரண்டு பேரும் போட்டி போட்டுக் காஞ்சிபுரத்தில் பல கொலைகள், கட்டப் பஞ்சாயத்துகள், வழிப்பறி, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் பதட்டமான சூழ்நிலையிலேயே காணப்பட்டது. இவர்களை பிடிப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அனைத்து முயற்சிகளிலும் இவர்கள் தப்பித்து கொண்டே இருந்தனர். மேலும் காஞ்சிபுரம் முழுவதும் இவர்கள் அடியாட்களை வைத்துக்கொண்டு பலவிதமான குற்றச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த, 2017ம் ஆண்டு நவம்பரில், காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே தணிகாசலம் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். இதில், தினேஷ் உயிர் தப்பினார். இதையடுத்து தணிகாசலத்திடம் நெருக்கமாக இருந்த காஞ்சிபுரம் வழக்கறிஞர் சிவகுமார் என்பவரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பிள்ளையார்பாளையம் பகுதியில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினர். வெட்டுக்  காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிவகுமார் உயிர் பிழைத்தார்.

தொடர்ந்து தணிகாசலத்தின் நண்பரான சதீஷ்குமார் என்பவரை, தொழில் போட்டியால் செய்யாறு அருகே ஓடும் பேருந்தில் தினேஷ் நண்பர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அதன்பிறகு தணிகாசலத்தின்  பைனான்சியரும், ரவுடி ஸ்ரீதரின் நெருங்கிய உறவினருமான கருணாகரன் என்பவரை, அவருடைய அலுவலகத்தில் வைத்து தினேஷின் நண்பர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்தனர். இவ்வாறு மறைந்த ரவுடி ஸ்ரீதரின் இடத்தை பிடிக்க, தினேஷ் மற்றும் தணிகாசலம் ஆகிய இரு கும்பலிடையே தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்துவந்தன.

இந்நிலையில் நேற்று தணிகாசலத்தின் நெருங்கிய நண்பர்களான ஜீவா மற்றும் கோபி ஆகிய இருவரும் சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு நோக்கி பைக்கில் சென்றுள்ளனர்.  பண்ணூர் அருகே செல்லும்போது, தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் 5 பைக்குகளில் துரத்திவந்து, ஜீவா மற்றும் கோபி ஆகியோர் மீது நாட்டு குண்டுகளை வீசி, சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். கொலையானவர்களின் பைக்கையும் எடுத்து சென்றுவிட்டனர்’ என கூறினார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலை குற்றவாளிகளான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Related Stories: