சென்னை, ஏப்.20: சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் வட்டங்கள் வாரியாக வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்தார். அவருடன் திமுக வட்ட செயலாளர்கள் எம்.நாகா, சை.மு.சேகர், அட்கோ கமலநாதன், எஸ்.பி.கோதண்டம், ந.தமிழரசு, வழக்கறிஞர் எம்.தரன் உள்பட பலர் சென்றனர்.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நேற்று காலை 9 மணியளவில் சைதாப்பேட்டை பஜார் சாலை திமுக அலுவலகம் முன்பிருந்து மார்க்கெட் சுரங்கப்பாதை, ஆலந்தூர் சாலை, ஐந்துவிளக்கு, மசூதி தெரு, ஜெயராம்செட்டி தெரு, மேற்கு ஜோன்ஸ் சாலை வழியாக சாரதி நகர் வரை சைதாப்பேட்டை இளைஞர் அணி சார்பில் 300 இளைஞர்கள் மா.சுப்பிரமணியன் போன்று மாஸ்க் அணிந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிறகு மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 16வது நாளாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை மக்கள் சிலாகித்து மகிழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் பெருகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் அலை வீசிக்கொண்டு இருக்கிறது. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
