குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்: சட்டீஸ்கர் முதல்வர் ஆவேசம்

ராய்ப்பூர்: ‘‘சட்டீஸ்கரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்,’’ என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கு அடுத்ததாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் கூறியதாவது: சட்டீஸ்கரில் தேசிய குடியுரிமை பதிவேட்டை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். குடியுரிமை திருத்தச் சட்டம் இப்போதைக்கு தேவையில்லாத ஒன்று. எங்கள் மாநிலத்தில் படிப்பறிவு இல்லாத மக்கள் ஏராளமாக உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 2.80 கோடி பேரில், கிட்டத்தட்ட பாதி பேரிடம் உரிய நில ஆவணங்கள் கூட இருக்காது. காலங்காலமாக இவர்கள் விவசாயத்தை மட்டுமே செய்து வருபவர்கள்.

படிப்பறிவில்லாத இம்மக்களிடம், தாத்தன் காலத்து ஆவணங்களை கொண்டு வரச் சொன்னால் எப்படி முடியும்? இதனால், சட்டீஸ்கரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாட்டின் பொருளாதார சூழ்நிலையை சரி செய்வதை விட்டு, தேவையில்லாத விஷயங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டிற்கு தொடர்பில்லாத ஆட்களை வெளியேற்றுவதில் யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை. ஆனால், சொந்த மக்களையே அகதிகளாக ஆக்க நினைப்பது தவறான செயல். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: