மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின்படி உயிரோடு இருந்திருந்தால் எம்ஜிஆர் அகதியாகி இருப்பார்: அரக்கோணத்தில் குணங்குடி ஹனிபா ஆவேசம்

சென்னை: எம்ஜிஆர் உயிருடன் இருந்தால் அவரும் குடியுரிமை சட்டதிருத்தத்தின்படி அகதியாகி இருப்பார் என்று அரக்கோணத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற குணங்குடி ஹனிபா கூறினார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பேரணி, கடையடைப்பு வலுத்து வருகிறது. 4வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு இந்திய மாணவர் அமைப்பினர் கழுத்தில் சிலுவை, நெற்றியில் விபூதி, தலையில் தொப்பி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கடையடைப்பு: திருப்பத்தூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், ஜமாத் அமைப்புகளும், தி.மு.க., காங்கிரஸ், விசி, மதிமுக, திராவிட கழகம் சார்பில் முழு கடையடைப்பு மற்றும் அறப்போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நாகை அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் அமைப்புகள் சபை சார்பில் கையில் கருப்பு கொடியுடன் பேரணி நடத்தினர். நாகூரில் கடைகளை அடைத்திருந்தனர்.

திருவாரூர்: திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஜமாத் அமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 400 பெண்கள் உள்பட சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அனைத்து ஜமாத் உலமாக்கள் சபை சார்பில் முஸ்லிம்கள் தேசியக் கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசாருக்கும் மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இவற்றில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.அரக்கோணம்: அரக்கோணத்தில் நடந்த பேரணியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைசிறுத்தை கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர். பின்னர் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் அமலாவதற்கு காரணமாக இருந்தது அதிமுக தான் என்பதை வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் இலங்கை கண்டியில் பிறந்தவர். எம்ஜிஆர் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் இந்த சட்டத்திருத்தத்தின்படி அகதியாகி இருப்பார். அப்போது அவர் கேட்டு இருப்பார், என்னையே அகதியாக்கும் சட்டத்தை ஆதரிக்கிறாயா? என்று முதல்வரை ராமாவரத்துக்கு அழைத்து கயிற்றால் கட்டி அடித்து இருப்பார். இது எம்ஜிஆரை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜமாஅத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ‘‘முஸ்லிம்களை திட்டமிட்டு பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதனால் நாடே பற்றி எரிகிறது. எங்கள் உயிரே போனாலும், ஆட்சியே கவிழ்த்தாலும் இச்சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம்’’ என்றார்.

Related Stories: