அலிபிரி கோ பிரதட்சண சாலை விசாகா சாரதா பீடாதிபதி ஆய்வு

திருமலை: அலிபிரியில் கட்டப்படும் கோ பிரதட்சண சாலையை விசாகா சாரதா பீடாதிபதி சொரூபானந்த சுவாமி ஆய்வு செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டியின் நன்கொடை மூலம் அலிபிரியில் 13 கோடியில் கோ பிரதட்சண சாலை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விசாகா சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்த சுவாமி, தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் சொரூபானந்த சுவாமி கூறுகையில், `ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வாகனங்களில் வரும் பக்தர்களும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்களும் அலிபிரியில் கட்டப்படும் சப்த கோ பிரதட்சண சாலையை தரிசித்து பூஜைசெய்து திருமலைக்கு சென்று மகா விஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் கோவிந்தனை தரிசனம் செய்வதால் முக்தி கிடைக்கும்’ என்றார்.

தொடர்ந்து தேவஸ்தான கோசாலை இயக்குநர் ஹரிநாத் ரெட்டி கூறும்போது, இந்த கோ பிரதட்சண சாலையில் 30 பசுமாடுகள் வைக்கப்பட உள்ளது.  இதில் சுழற்சி முறையில் தினமும் 7 பசுமாடுகளை பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து பூஜைகள் செய்வதற்காக வைக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் தங்கள் பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நினைவாக கோதானம் செய்யும் விதமாகவும், எடைக்கு எடை பசு தீவனங்கள் நன்கொடையாக அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பசுவின் மூலம் கிடைக்கக்கூடிய பஞ்சகவ்வியம் குறித்தும் விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.

Related Stories: