அபித் அலி 174, ஷான் மசூத் 135 இலங்கைக்கு நெருக்கடி

கராச்சி: இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில், பாகிஸ்தான் தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் அந்த அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 271 ரன்னுக்கு அனைத்து  விக்கெட்டையும் பறிகொடுத்தது.  இதைத் தொடர்ந்து, 80 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன் எடுத்திருந்தது. ஷான் மசூத் 21, அபித் அலி 32 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.  அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 68.3 ஓவரில் 278 ரன் சேர்த்தது. ஷான் மசூத் 135 ரன் (198 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), அபித் அலி 174 ரன் (281 பந்து, 21 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 3ம் நாள் முடிவில் 2  விக்கெட் இழப்புக்கு 395 ரன் எடுத்துள்ளது. கேப்டன் அசார் அலி 57, பாபர் ஆஸம் 22 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, பாகிஸ்தான் 315 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories: