அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது : முதல்வர் சர்பானந்தா சோனாவால்

கவுகாத்தி: அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குடியுரிமை சட்ட திருத்தத்தால் நமது அடையாளம், மொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம்,  மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது இந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்து வன்முறை வெடித்தது. தற்போது தென்மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் பரவியுள்ளது. அசாமின் கவுகாத்தியில் தொடங்கிய இந்த போராட்டம் கண்டன பேரணி, வாகனங்களுக்கு தீவைத்தல் என வன்முறை களமாக மாறியது.

இதையடுத்து, கடந்த 11ம் தேதி கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வதந்தி மற்றும் போராட்டம் பரவுவதை தடுக்க கவுகாத்தி, காம்ரூப் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. 8வது நாளாக நேற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் நமது மண்ணின் மைந்தர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது என்று தெரிவித்தார்.

Related Stories: