நிர்பயா வழக்கில் இருந்து தலைமை நீதிபதி திடீர் விலகல்

புதுடெல்லி: நிர்பயா குற்றவாளியின் சீராய்வு மனு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று திடீரென விலகினார். இந்த மனு, வேறு அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 3 குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், 4வது குற்றவாளி அக்ஷய் குமார் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்ட, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்பயாவின் தாயார் சார்பாக தனது உறவினர்கள் ஒருவர் ஏற்கனவே ஆஜராகி  இருப்பதால் இந்த வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி பாப்டே விலகுவதாக அறிவித்தார்.  மேலும், வேறு ஒரு அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கப்படும் என் அவர் கூறியுள்ளார்.

Related Stories: