நெரிசலை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடிகளில் இரு பாதையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி

* தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு

* நாடு முழுவதும் 1 கோடி ஸ்டிக்கர் விநியோகம்

சென்னை: வாகன நெரிசலை கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடிகளின் இரண்டு பாதைகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களை அனுமதிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 540 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் அடங்கும். இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் ஸ்டிக்கர் அனைத்து சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான வாகனங்களுக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் பெற முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை 1 கோடி வாகனங்களுக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் 20 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் ஒரு வழிப்பாதை மட்டுமே தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் நிலவுகிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, சுங்கச்சாவடிகளில் இரண்டு பாதைகளில் கட்டணம் செலுத்தும் வாகனங்கள் அதாவது பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் செல்ல அனுமதிக்கலாம். மேலும், வாகன நெரிசலுக்கு ஏற்ப, தற்காலிகமாக வழிப்பாதைகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories: