காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: பாதுகாப்பு படையின் பதில் தாக்குதலில் 2 பாகிஸ்தான் கமாண்டோக்கள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 2 பாகிஸ்தான் கமாண்டோக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக எல்லையில் போர்நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் அதை முறியடித்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி செக்டாரில் பாகிஸ்தான் அதிரடிப் படையினர் நேற்று மாலை இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலை மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் துருப்புகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய ராணுவத்தினர், பின்வாங்குமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். அனால் அதனை பொருட்படுத்தாத பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், இருதரப்பினரும் பீரங்கிகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவத்தின் ரைஃபிள்மேன் சுக்விந்தர் சிங், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குலில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காஷ்மீரின் பந்திபோரா மாவட்ட எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: