நள்ளிரவு துவங்கி விடிய விடிய சுழற்றியடித்தது குமரியில் பயங்கர சூறைக்காற்று: மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சாலை, மின்சாரம் துண்டிப்பு

குலசேகரம்: குமரியில் பயங்கர சூறாவளியால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம், போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. குமரி  மாவட்டத்தில்  நள்ளிரவு தொடங்கி நேற்று காலை  வரை சூறைக்காற்று வீசியது. காலை 5.30  மணியளவில் வீசிய சூறைக்காற்றில்  திற்பரப்பு சந்திப்பில் இருந்து  அருவிக்கு செல்லும் சாலையில் தனியாருக்கு  சொந்தமான அயனி மரம் சாலையில்  குறுக்கே சரிந்து விழுந்தது. இதில் ஒரு  டிரான்ஸ்பார்மர், ஒரு மின்கம்பம்  முறிந்தது. இதனால் அந்த  பகுதியில் மின் விநியோகம்  துண்டிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, கோதையாறு,  சிற்றாறு, குற்றியாறு போன்ற மலை கிராம பகுதிகளில்  சூறைக்காற்று காரணமாக பல  இடங்களில் ரப்பர் மரங்களின் கிளைகள் முறிந்தும்,  சில மரங்கள் வேரோடு  சரிந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பாதைகள்  துண்டிக்கப்பட்டிருப்பதுடன் மின் கம்பங்களும் சேதடைந்துள்ளன. பேச்சிப்பாறை  அடுத்துள்ள மூக்கரைகல்-கோதையாறு சாலையில் மரங்கள்,  50க்கும் மின்  கம்பங்கள் முறிந்து விழுந்தன.

ரயில் மீது விழுந்த மின்கம்பி: நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து மும்பை  செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்  ஆரல்வாய்மொழி தாண்டி ரயில்   வந்து கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழி -   குமாரபுரம் பகுதியில் ரயில் வந்தபோது ரயிலுக்கு   மின்சாரம் வழங்கும் மின்கம்பி, பலத்த காற்றின் காரணமாக ஒடிந்து ரயில் மீது விழுந்தது. உடனடியாக மின்சாரம்   துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல் ரயிலும் நின்றுவிட்டது. ரயில்வே  ஊழியர்கள்விரைந்து வந்து ஒடிந்து விழுந்த   மின்கம்பியை மீண்டும் இணைத்தனர். இதையடுத்து 8.30 மணியளவில் ரயில் புறப்பட்டு சென்றது. மழை நீரை அகற்றக்கோரி மறியல்: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் குடியிருப்பை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி நேதாஜிநகர், சின்னகண்ணுபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: