மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: 69 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம்

தேனி: வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதையடுத்து மதுரை, தேனி உட்பட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக். 16ம் தேதி தொடங்கியது. ஒன்றரை மாதமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில் 68.7 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,090 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு அப்படியே திறந்து விடப்படுகிறது. பெரியாறு அணையின் மொத்த உயரமான 152 அடியில் தற்போது 128.60 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,173 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,650 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.

வைகை அணை கடந்த 3ம் தேதி 66 அடி உயரத்தை எட்டியது. இதனையடுத்து, அன்றைய தினம் பிற்பகலில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால், 2,090 கனஅடி வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, வருவாய்த்துறையினர் மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ளவர்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மக்கள் இருளில் தவிப்பு: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி நேற்று பிற்பகல் வரை மழை கொட்டியது.

மழையால் தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அரசமரம் வேரோடு சாய்ந்தது. இதில் அப்பகுதியில் இருந்த 6 வீடுகள் சேதமடைந்தன. மரம் விழும் சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. மேலும், மின்கம்பங்களும் சேதமடைந்து விழுந்ததால் இரவு முழுவதும் தங்கச்சிமடம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Related Stories: