தெலுங்கானா என்கவுண்டர் விவகாரம்: தாமாக முன்வந்து விசாரிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்..விசாரணைக்காக குழுவை அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: தெலுங்கானாவில் 4 பேர் எனவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 28ம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் முகமது பாஷா, சின்னகேசவலு, கிளீனர்கள் சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிச்செல்ல முயன்றதால் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டரின் போது மூன்று காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தெலங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்த நிலையில் அங்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டதற்காக போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், இவ்விகாரம் குறித்து விசாரிக்க தேரிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணையம், விசாரணைக்காக தெலுங்கானாவுக்கு ஒரு குழுவை உடனடியாக அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான இந்த குழு, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, அறிக்கையை விரைவாக தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறையினர் எச்சரிக்கையாகவோ அல்லது எந்தவிதமான அசம்பாவிதங்களுக்கும் தயாராக இல்லை என்பதை இந்த சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது என மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories: