கடலூர் அருகே திட்டக்குடி லாரிகளில் குப்பை எடுத்துவந்து வெள்ளாற்றில் கொட்டினர்: சமூகவலைதளத்தில் வைரலையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெள்ளாற்றில் லாரிகளில் குப்பைகளை எடுத்து வந்து கொட்டியதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன்காரணமாக  வெள்ளாற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீர் கடந்த 2ம் தேதி மாலை 3 மணியளவில்  திட்டக்குடியை வந்தடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, குப்பை கிடங்குகளுக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள குப்பைகளை வெள்ளாற்றில் மூன்று மினி லாரிகளில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.

இதை அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அவர்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதுகுறித்து அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் விசாரணை நடத்தினார். பின்னர், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவிட்டார். மேலும் ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதார வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் நடந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Related Stories: