ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க விரைவு நீதிமன்றம்: உயர் நீதிமன்றம் அனுமதி

திருமலை: ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கொலை வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தெலங்கானாவின் சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவரை கடந்த 27ம் தேதி லாரி டிரைவர் மற்றும் கிளீனர்கள் நான்கு பேர் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்தனர். குற்றவாளிகள் 4 பேரையும் நடுரோட்டில் வைத்து என்கவுன்டர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மகளிர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும்  எதிரொலித்தது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தெலங்கானா மாநில நீதித்துறை அமைச்சர் இந்திர கிரண், டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் விதமாக விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை பரிசீலித்த உயர்நீதிமன்றம் தெலங்கானா மாநிலம், மெகபூப்நகர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி தலைமையில் விரைவு நீதிமன்றம்  அமைத்து உத்தரவு அளித்து நேற்று அனுமதி வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் வாக்குமூலத்தை பெற்று  தொழில்நுட்ப ரீதியாகவும்,  தடயவியல் ரீதியாகவும் விசாரணையை விரைந்து முடித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என போலீசாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 28 வயது வாலிபர் பிரவீனுக்கு 57 நாட்களில் விசாரணை முடித்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7 நாள் போலீஸ் காவல்

குற்றவாளிகள் முகமது ஆரிப்,  நவீன், சிவா, சென்னகேசவா ஆகியோரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை  செய்வதற்காக நீதிமன்றத்தில் 10 நாட்கள் அனுமதி கேட்கப்பட்டது.  இந்நிலையில் சாத்நகர் நீதிமன்றம் நேற்று குற்றவாளிகள் 4 பேரையும் காவலில்  எடுத்து விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Related Stories: