ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம் நிர்மலா சீதாராமனுடன் மாநில அமைச்சர்கள் சந்திப்பு

புதுடெல்லி: நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

 சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்ட்டது. ஜிஎஸ்டி சட்டப்படி, ஜிஎஸ்டி வரியினால் மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2015-16 ஆண்டு நிதியாண்டின் வரி வருவாயில் 14 சதவீதம் என்ற அடிப்படையில், மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த இழப்பீடு தற்காலிகமாக கணக்கிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.  இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சரகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தாமதத்தால் மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், அதனால் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: